July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”டிசம்பர் வரையில் கட்டுப்பாடுகளுடன் நடந்துகொள்ள வேண்டும்”: சுகாதார பணிப்பாளர்

பயணக் காட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார ஆலோசனைகளை மீறி சுற்றுலாப் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடரும் நிலையிலும் நுவரெலியா, பதுளை உள்ளிட்ட பிரதேசங்களுக்கு கொழும்பு உள்ளிட்ட தூர இடங்களில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சுகாதார பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடுகளையும் மீறி இவர்கள் எப்படி சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்கின்றார் என்று தெரியவில்லை என்று அவர் அதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் அனைவரும் நாடு தொடர்பிலும் தமது பிள்ளைகள் தொடர்பிலும் சிந்தித்து செயற்படுவது அவசியமாகும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு முன்னர் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் சுகாதார ஒழுங்குவிதிகளை மீறி சுற்றுப் பயணங்களை மேற்கொண்ட காரணத்தினாலேயே நாட்டை முடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது என்பதனை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், இன்னும் தொற்று அச்சுறுத்தல் நீங்காத காரணத்தினால் டிசம்பர் வரையிலும் கட்டுப்பாடுகளுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் சுகாதார பணிப்பாளர் கூறியுள்ளார்.