‘அபே ஜனபல’ கட்சியில் இருந்து நீக்கினாலும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர், இப்பிரச்சினைக்கு தீர்வுகாண சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராகவுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒருபோதும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டேன் எனவும் தெரிவித்தார்.
‘அபே ஜனபல’ கட்சியில் இருந்து நீக்குவதற்கும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்பதற்கும் கட்சி முன்னெடுத்துள்ள தீர்மானங்கள் வெற்றி பெறாது. 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் விஜயதரணி என்ற கட்சியின் ஊடாக ‘அபே ஜனபல’ கட்சியின் கூட்டணியில் இணைந்து கொண்டேன்.
பொதுத் தேர்தலில் கிடைக்கப் பெற்ற 67ஆயிரம் வாக்கிற்கு ஒரு தேசிய பட்டியல் கிடைக்கப் பெற்றது.அப்போதைய சூழ்நிலையில் பாராளுமன்றம் செல்வதற்கு கூட்டணியில் போட்டியிட்ட எவருக்கும் தகுதி இருக்கவில்லை. விஜயதரணி கட்சி ஊடாக கூட்டணியமைத்த எனக்கு மாத்திரமே பாராளுமன்றம் செல்வதற்கான தகுதி இருந்தது. அதற்கமையவே பாராளுமன்றம் சென்றேன்.
ஆகவே எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுக்கவும், கட்சியில் இருந்து நீக்கவும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பிறிதொரு தரப்பினருக்கு வழங்கவும் அக்கட்சிக்கு அதிகாரம் கிடையாது.
3 மாத காலத்திற்கு மாத்திரம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதாக நான் வாக்குறுதி வழங்கியதாக கூறும் கருத்துக்கள் அடிப்படையற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக எவருடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. வாக்குறுதியும் வழங்கவில்லை. ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது.
‘அபே ஜனபல’ கட்சியின் தீர்மானங்கள் குறித்து பதற்றமடைய போவதில்லை. இப்பிரச்சினைக்கு தீர்வு காண சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளேன். முறையற்ற வகையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்து பிறிதொரு தரப்பினருக்கு வழங்க முன்னெடுக்கும் சூழ்ச்சி ஒருபோதும் வெற்றிபெறாது என்றும் தெரிவித்தார்.