ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பல இதுவரையில் அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படவில்லை என்று கொழும்புப் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
‘ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டு’ எனும் தொனிப்பொருளில் அவுஸ்திரெலியாவில் வசிக்கும் இலங்கைகயர்களுடன் வீடியோ ஊடாக நடத்தப்பட்ட கலந்துரையாடலிலேயே மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதனை கூறியுள்ளார்.
குறித்த தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதாக கடந்த தேர்தல் மேடையில் கூறிய போதும், ஆணைக்குழுவின் அறிக்கை வந்த பின்னர், அந்த பரிந்துரைகளில் அனைத்தையும் செயற்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலைமையில் அந்த தாக்குதலின் பின்னால் இருந்தவர்கள் யார்? என்பதனை அறிந்துகொள்வதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியமானது என்றும் அந்த கலந்துரையாடலில் பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் பின்னால் அடிப்படைவாதிகள் சிலர் உள்ள போதும், அதனைவிடவும் பெரிய விடயமொன்று இடம்பெற்றுள்ளதாகவும், அது என்ன என்பதனை கண்டறிய வேண்டும் என்றும் அவர் அதன்போது குறிப்பிட்டுள்ளார்.