July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”மீன்பிடி அமைச்சர் அசமந்தப் போக்கில் செயற்படுகின்றார்”: சாணக்கியன்

இலங்கை அரசாங்கத்தின் மீன்பிடி அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, இலங்கை சட்டத்திட்டங்களை முறையாக அமுல்படுத்தாத காரணத்தினால், வடக்கு- கிழக்கில் வாழும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்படி நடவடிக்கைகளை கண்டித்து முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரை இடம்பெற்ற போராட்டத்தின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டமானது இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமோ அல்லது இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டமோ அல்ல என சாணக்கியன் அதன்போது தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மீனவர்களில் ஒருசிலர் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை, மீன்பிடித்துறை அமைச்சர் பார்த்தும் பாராது செயற்படுவதற்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரின் இந்த அசமந்தச் செயற்பாடானது தமிழ் நாடு மற்றும் வடக்கு – கிழக்கு வாழ் மீனவர்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் இதனால் தமிழ்நாட்டு மக்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமிடையிலான நல்லுறவு பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, மீன்பிடித்துறை அமைச்சர் வடக்கு – கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.