July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பந்துல, மஹிந்தானந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தால் ஆதரிப்போம்”

வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கு எதிராக பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தால் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் முழுமையான ஆதரவை வழங்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

நீர்கொழும்பு பகுதியில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விளைநிலங்களில் விவசாயம் செய்ய வேண்டிய விவசாயிகள் தற்போது வீதிக்கிறங்கி போராடுகிறார்கள். உரம் இல்லாமல் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினையினை எதிர்வரும் காலங்களில் முழு நாடும் எதிர்கொள்ள நேரிடும். அரசாங்கத்தின் தவறான தீர்மானத்தினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

உரப்பிரச்சினைக்கு தீர்வு கோரி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களில் 40 பேர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒன்றும் மிகுதியாகவில்லை. விவசாயிகள் பெரும் பாதிப்பை தற்போது எதிர்கொண்டுள்ளார்கள்.

விவசாயிகள் தொடர்பில் அக்கறை கொள்ளும் பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்கள் விவசாயத்துறைக்கும், விவசாயிகளுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தீர்வாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவேண்டும்.

மறுபுறம் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது.அத்தியாவசிய பொருட்களின் விலைகளை வர்த்தகர்கள் தீர்மானித்துக் கொள்கிறார்கள்.இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆகவே வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு எதிராக பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர வேண்டும்.போலியாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைப்பதை விடுத்து இவ்விருவருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.