January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 8 பேர் கைது

நாடளாவிய ரீதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில், பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக மூன்று மதுபான சுற்றிவளைப்புகளில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 242.25 லீற்றர் மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் 568 லீற்றர் கோடா, ஒரு ஓட்டோ, ஒரு செப்புத் தகடு, 5 இரும்பு பீப்பாய் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, கதிர்காமம் திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரன்மினிதென்ன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கியுடன் திஸ்ஸமஹாராம பிரதேசத்தை சேர்ந்த 37 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, கடவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 6 கிராம் 75 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 34 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மனன்துரை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அனுமதிப்பத்திரமின்றி களஞ்சியப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த மணலை டிப்பர் ரக வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்த இருவரை டிப்பர் ரக வாகனத்துடன் விசேட அதிரடிப்படையினர் கைது செய்து தங்கொட்டுவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தங்கொட்டுவ, லுனுவில ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 23, 27 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சுமார் ஒன்றரை கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வத்தளைப் பிரதேசத்தை சேர்ந்த 33 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.