இலங்கையில் தடைசெய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தாது என்று வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஐநாவில் உரையாற்றும் போது, புலம்பெயர் தமிழ் அமைப்புகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார்.
எனினும், இலங்கையில் தடை செய்யப்படாத அமைப்புகளுடனும் தனிநபர்களுடனும் தாம் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழர் மன்றம், பிரிட்டிஷ் தமிழ் மன்றம், கனேடியன் தமிழ் காங்கிரஸ், அவுஸ்திரேலியன் தமிழ் காங்கிரஸ், கனேடிய தமிழ் தேசிய சபை, தமிழ் இளைஞர் அமைப்பு மற்றும் உலகத் தமிழ் ஒருங்கிணைப்புக் குழு ஆகியன இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாகும்.
தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சட்ட விரோதமானது என்று வெளியுறவு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லிணக்க செயன்முறையின் ஒரு பகுதியாக அரசாங்கம் பல குழுக்களுடனும் தனிநபர்களுடனும் கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.