July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஆசிரியர்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதியிலிருந்து மீறினால் 38 ஆயிரம் ஊழியர்களையும் களத்தில் இறக்குவேன்’

அரசாங்கம் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நம்பி அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். அதேபோல் அரசாங்கம் கொடுத்துள்ள வாக்குறுதிகளை மீறினால்,38 ஆயிரம் ஊழியர்கள் அங்கம் வகிக்கும் எமது தாதியர் சங்கத்தையும் இணைத்துக் கொண்டு ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை வெற்றிகொள்ள அரசாங்கத்தை எதிர்த்து களத்தில் இறங்குவேன் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க பிரதிநிதிகள் உண்மையாக செயற்படவில்லை. அவர்களின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி உள்ளதென்பது வெளிப்பட்டுள்ளது.மாணவர்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்காது தமது கொடுப்பனவுகள் மற்றும் அரசாங்கத்தை நெருக்கடியில் தள்ளும் நகர்வுகள் இதன் பின்னணியில் உள்ளது என்பது வெளிப்படுகின்றது.

இதனால் மாணவர்களின் எதிர்காலம் நாசமாக்கப்படுகின்றது.நான் தலையிட்ட காரணத்தினால் தான் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அவ்வாறு இருந்தும் தொழிற்சங்கங்கள் மிகவும் மோசமாக நடந்து கொண்டுள்ளன எனக் கூறிய அவர்,

நான் தலையிட்டுள்ள காரணத்தினாலும், ஜனாதிபதியும் பிரதமரும் இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக எனக்கு வாக்குறுதி வழங்கியுள்ள காரணத்தினாலும் ஆசிரியர், அதிபர் சங்கங்கள் எனது வாக்குறுதிகளை நம்பி மாணவர்களுக்காக ஆசிரியர் சங்க போராட்டங்களை கைவிடுங்கள்.

இப்போது அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை ஏமாற்றி அரசாங்கம் சூழ்ச்சி செய்யுமானால் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தாதியர் சங்கத்தில் 38 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். அவர்களையும் இணைத்துக்கொண்டு ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைக்காக அரசாங்கத்தை எதிர்த்து போராடுவேன்.

ஆகவே ஒரு சில சங்கங்கள் அரசியல் நோக்கங்களுக்காக சகல ஆசிரியர்களையும் தவறாக வழிநடத்துவதை நிறுத்த வேண்டும். அதேபோல் ஆசிரியர், அதிபர்களும் சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும். ஆகவே ஆசிரியர்கள் எதற்காகவும் அச்சப்பட வேண்டாம்.

நாம் முன்னணியில் நிற்கின்றோம் என்பதை உறுதியாக கூறியுள்ளோம். அதுமட்டுமல்ல, ஆசிரியர்கள் பணிக்கு சென்றால் சம்பளம் கிடைக்கும். இல்லையேல் சம்பளம் வெட்டப்படும் என்பதையும் சகலரும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.