
திருகோணமலை எண்ணெய் குதங்கள் ஒருபோதும் இந்தியாவிற்கு சொந்தமாக்கப்படவில்லை, உடன்படிக்கை மூலமாக இவற்றை இந்தியாவிற்கு கொடுத்துவிட்டதாக கூறுவது முழுப்பொய்யாகும் எனவும், சகல எண்ணெய் குதங்களும் இலங்கைக்கே சொந்தமாக உள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை எண்ணெய் குதங்கள் அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் 2003 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி உடன்படிக்கை ஒன்றை இந்தியாவுடன் செய்து கொண்டது. அதேபோல் இந்த உடன்படிக்கையை செய்த வேளையில் வரி உடன்படிக்கை ஒன்றினையும் செய்ய வேண்டும் என முதலாம் உடன்படிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறான வரி உடன்படிக்கை எதுவும் செய்து கொள்ளவில்லை.
ஏனென்றால், நாம் தலையிட்டு அப்போதைய ஆட்சியை மாற்றினோம். 2003 ஆம் ஆண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும் 2004 ஆம் ஆண்டில் நாம் தலையிட்டு ஆட்சியை மாற்றிய காரணத்தினால் இந்த வரி ஒப்பந்தம் கைவிடப்பட்டது.
திருகோணமலை எண்ணெய் குதங்கள் இந்தியாவிற்கு சொந்தம் என்பது முழுப்பொய்யாகும். சகல எண்ணெய் குதங்களும் இலங்கைக்கே சொந்தமாகும்.ஆகவே எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு கொடுப்பதா இல்லையா என்பதை அரசாங்கமே கூற வேண்டும். இதில் இந்தியா கூறுவதற்கு ஒன்றுமே இல்லை எனவும் அவர் கூறினார்.