July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”நிதி ஒதுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்யுங்கள்” பிரதமர் அறிவுறுத்தல்

அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்கு அனுப்புவதற்கு பதிலாக ஆண்டு இறுதிக்குள் அபிவிருத்தி திட்டங்களை நிறைவு செய்யுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற நகர அபிவிருத்தி, கழிவுப்பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய துப்புரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் மூன்றாம் காலாண்டுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

திறைசேரியில் மிகுதியாகும் நிதித்கேற்ப முதலீடுகளின் ஊடாக திட்டங்களை செயற்படுத்துவது குறித்து ஏற்கனவே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஜுலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட நூறு நகர அபிவிருத்தி திட்டங்கள் இதுவரை வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள சிறிநிமல் பெரேரா, இவ்வாண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த அபிவிருத்தி திட்டங்களில் பெரும்பாலானவையை நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய நாணயக்கார, 2024ஆம் ஆண்டுக்குள் 60,000 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டம் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அதற்கமைய குறைந்த வருமானம் ஈட்டுவோருக்காக 40,000 வீடுகளும், நடுத்தர வகுப்பினர் மற்றும் பிற மட்டத்தினருக்கு 20,000 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். நூறு நகர திட்டத்திற்கமைய அந்த ஒவ்வொரு நகரிலும் 100 வீடுகள் என்ற அடிப்படையில் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் உதய நாணயக்கார கூறயுள்ளார்.

இதன்போது, கொழும்பில் மாத்திரமன்றி கிராமப் பகுதிகளிலும் இந்த வீடமைப்பு திட்டங்களை முன்னெடுங்கள் என பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.