July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘திவிநெகும’ வழக்கில் இருந்து பஸில் ராஜபக்‌ஷ விடுதலை!

File Photo

திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்தின் நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கித்சிறி ரணவக்க ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப் பத்திரங்களை சட்டமா அதிபர் தரப்பு நீக்கிக்கொண்டதையடுத்து, இருவரையும் அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்தின் நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு 36.5 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் போதுமான சாட்சியங்கள் இல்லாமையினால் குற்றப் பத்திரங்களை நீக்கிக்கொள்வதற்கு அண்மையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் நடவடிக்கையெடுக்கப்பட்டிருந்தது.