July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”எமது உரிமைகளை வெல்வதற்கு இந்தியா துணை நிற்க வேண்டும்”: யாழ். மாநகர முதல்வர்

File Photo

எமது உரிமையினை வெல்வதற்கு இந்தியா எமக்கு துணை நிற்க வேண்டும் என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று நடத்தப்பட்ட அப்துல் கலாமின் 90 ஆவது பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மணிவண்ணன் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது, எமது உரிமை கோரிக்கையை வெல்வதற்கு இந்தியா எமக்கு துணை நிற்க வேண்டும் எனவும் எமது தந்தை நாடு என்ற அடிப்படையில் நமக்கு துணை நிற்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ஒருபோதும் பாரத தேசத்தினுடைய நலன்களுக்கு முரணாக நாங்கள் செயற்படப் போவதில்லை. நாங்கள் தொப்புள்கொடி உறவுகளாக அவர்களுடைய நலன்களைப் பாதுகாப்பதற்காக அவர்களுடைய பொருளாதாரத்தை அவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தகூடிய ஒரு தரப்பாக இந்த தேசத்தில் இருப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

‘தென்னிந்தியா என்பது எமது தொப்புள் கொடி உறவுகள் வாழ்கின்ற இடமாகும் ஆகவே பண்பாட்டு ரீதியாகவும் இந்தியாவை நாங்கள் பின்பற்றுகிறோம். எங்களுடைய அரசியல் கலாசாரத்திலும் பாரத தேசத்தினுடைய அரசியல் கலாசாரத்தை பின்பற்றுகின்றோம் என கூறியுள்ளார்.

இந்த நேரத்தில் எமது நீண்டகால உரிமை கோரிக்கைக்கு இந்தியா செவிசாய்க்க வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை நாம் தென்னிலங்கையில் இருக்கின்ற சிங்கள மக்களுக்கும் எதிரானவர்களல்ல நாங்கள் மற்றய இனத்தை அழிப்பதற்காக எமது உரிமையினை கோரவில்லை எனவும் யாழ். மாநகர முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாங்கள் எம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக எம்மை வளர்த்துக் கொள்ள எமக்கு உரிமை வேண்டும் என கடந்த 60 வருடங்களாக போராடி வருகின்றோம். அந்த வகையில் இந்தியா எமது கோரிக்கையினை நியாயமாக புரிந்து எமது கோரிக்கைகளை அடைவதற்குத் தன்னுடைய முயற்சி, அழுத்தங்களையும் அதனுடைய ஒத்துழைப்புகளையும் வழங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.