November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஏறாவூர் பகுதியில் 400 ஏக்கர் பரப்பில் விசேட துணி உற்பத்தி வலயம்; நாடாளுமன்ற அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி

இந்நாட்டுக்கு பொருளாதார மற்றும் சமூக நன்மைகளை கொண்டுவரக்கூடிய 400 ஏக்கர் பரப்பில் புதிய விசேட துணி உற்பத்தி வலயத்தை அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் இடம்பெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

2008 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துணி உற்பத்தியாளர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த விசேட துணி உற்பத்தி வலயம் கைத்தொழில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சின் ஒருங்கிணைப்பில் இலங்கை முதலீட்டு சபையினால் செயற்படுத்தவுள்ளதாக இங்கு புலப்பட்டது.

வெளிநாட்டு சந்தைகளை இலக்காகக் கொண்டு உயர் தரத்திலான துணிகளின் உற்பத்தியை ஆரம்பிப்பதற்கு இதுவரை ஏறாவூர் பகுதியில் இரண்டு தொழிற்சாலைகள் விருப்பம் தெரிவித்திருப்பதாக இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் பசன் வணிகசேகர இதன்போது குழுவில் விளக்கமளித்தார்.

நாட்டிலுள்ள ஏனைய தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் வரி நிவாரணங்களை விட மேலதிக நன்மைகள் இந்தத் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுமாயின் அது நியாயமற்றது என இது தொடர்பில் தனது கருத்தை முன்வைத்த இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா சுட்டிக்காட்டினார்.

இது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மாத்திரம் எல்லையற்ற வாய்ப்புக்களை வழங்கும் திறந்த காசோலையொன்றை வழங்குவது போன்ற சந்தர்ப்பமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார இதன்போது குறிப்பிட்டார்.

இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துணி உற்பத்தியாளர்களை நோக்காகக் கொண்ட வலயமே அல்லாமல் ஆடை தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதல்ல என இதன்போது கருத்துத் தெரிவித்த நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்தார்.