October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இனியும் கவனம் செலுத்தாவிடின் அடுத்த மூன்று ஆண்டுகளில் விரட்டியடிக்கப்படுவோம்’

மக்களின் நலன்களை விடவும் வியாபாரிகளின் தீர்மானங்களுக்கு அமைய நாட்டை முன்னெடுக்க அரசாங்கம் இடமளிக்க முடியாது எனக் கூறும் அமைச்சர் மஹிந்த அமரவீர, இப்போது தவறுகளை திருத்திக்கொள்ளாது போனால் அடுத்த மூன்று ஆண்டுகளில் மக்களால் இந்த அரசாங்கம் விரட்டியடிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடி நிலைமையை நாடு எதிர்கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக கொவிட் வைரஸ் தாக்கம் காரணமாக மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.இலங்கை எதிர்பார்த்திருந்த வருவாய்கள் அனைத்துமே முடக்கப்பட்டுள்ளது.எனவே இதுவே அரசாங்கத்திற்கு பெரிய நெருக்கடி நிலைமைகளை உருவாக்கியுள்ளது எனக் கூறியுள்ள அவர்,

ஒரு சில வியாபாரிகள் செயற்படும் விதம் மிகவும் மோசமானதாகும்.வியாபாரிகளின், இறக்குமதியாளர்களின் நோக்கங்களுக்காக தேவைக்கேற்ப விலை அதிகரிப்பை அனுமதிக்க முடியாது. அரசாங்கம் இந்த விடயங்களை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்க முடியாது. அரசாங்கம் தலையிட்டு தீர்மானம் எடுக்க வேண்டும். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இந்த காரணிகளை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம் எனவும் கூறியுள்ளார்.

இந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கமாக நாம் விட்டுள்ள தவறுகள் என்ன என்பதை ஆராய்ந்து, சுய கணிப்பை செய்து கொண்டு உடனடியாக திருத்திக்கொள்ள வேண்டிய விடயங்களில் கவனம் செலுத்தி மக்கள் மீதான சுமையை குறைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும், இல்லையேல் அடுத்த மூன்று ஆண்டுகளில் எமது அரசாங்கத்தை மக்களே விரட்டியடித்து விடுவார்கள் எனவும் அவர் கூறினார்.