இரத்தினபுரி மாவட்டத்தின் காவத்தை, வட்டபொத்த தோட்டத்தில் வசிக்கும் மக்கள் மக்கள் பெரும்பான்மை இன குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.
குறித்த தோட்டத்தின் மத்திய பிரிவில் அமைந்துள்ள தோட்டக் குடியிருப்பில் வாழ்ந்த மக்களின் மீது அதனை அண்மித்த யடாகர கிராமத்தில் வசிக்கும் பெரும்பான்மை இன கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் , காயமடைந்த தமிழ் இளைஞர்கள் மூவரும் அவரது தாயாரும் கஹவத்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து தான் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று அச்சத்தில் வாழும் மக்களை சந்தித்து கலந்துரையாடியதாக ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு தெரிவித்ததோடு, பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானுக்கு அறிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவத்தின் போது, தோட்டக் குடியிருப்பொன்றும், நான்கு முச்சக்கர வண்டிகளும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான இளைஞருக்கு சொந்தமான சுயதொழிலில் ஈடுபடும் இயந்திரங்களும் மற்றும் அவரது இரண்டு பவுன் தங்க நகையும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை தாம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் பெருமாள் மக்களுக்காக தாம் துணிந்து செயற்படுவதாகவும் கூறியுள்ளார்.