இலங்கையில் விவசாயிகளுக்கு உரம் வழங்காததால் நல்ல அறுவடையைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்க்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் பி. ஹெரிசன் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று நிலவும் உரத் தட்டுப்பாடு காரணமாகவே மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்ல அறுவடையைப் பெறுவதற்கு உரம் மற்றும் பூச்சி நாசினிகள் போடப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்குத் தேவையான பீடை நாசினிகளை இலவசமாக வழங்காவிட்டாலும், பணம் கொடுத்து பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும்படி எதிர்க்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
முப்பது அல்லது நாற்பது வருடங்களில் செயற்படுத்த வேண்டிய திட்டத்தை அரசாங்கம் ஒரே இரவில் மேற்கொண்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பி. ஹெரிசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக நாடுகள் தொடர்ந்தும் இரசாயன உரத்தைப் பயன்படுத்துவதாகவும் படிப்படியாகவே இயற்கை உர பயன்பாட்டுக்கு செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.