பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும் என மன்னார் மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவசுப்ரமணியம் தில்லைராஜ் என்பவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த கைதி உள்ளிட்ட மேலும் 10 கைதிகளை, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கடந்த மாதம் 12 ஆம் திகதி மாலை வேளையில் வெளியில் அழைத்து முழந்தாளிடச் செய்து அச்சுறுத்தியமை தொடர்பாக இன்று சந்தேகநபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இராஜாங்க அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு, கொலை முயற்சி, சித்திரவதை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படவேண்டும் எனவும் கைதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணி மன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான நிறைவான அறிக்கையொன்றை நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு சிறைச்சாலைகள் அத்தியட்சகர் நாயகம் மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என இதன்போது மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.