சுகாதார வழிகாட்டுதல்களை மீறி திருமணங்கள் உட்பட பல்வேறு விருந்துகளை நடத்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொவிட் தொற்றுநோய்க்கான ஆபத்து இன்னும் குறையவில்லை என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டார்.
தற்போதைய நிலைமையை புரிந்து கொண்டு சரியான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பொதுமக்களை அவர் அறிவுறுத்தினார்.
விழாக்கள் நடத்த அனுமதி கோரி ஏராளமானவர்கள் தினசரி சுகாதார மருத்துவ அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு வருகை தருவதாகவும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
இதனிடையே முழுமையாக கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத எவரும் திருமண மண்டபங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று, அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அளவிலான திருமண சேவை வழங்குனர்கள் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.