July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கலந்துரையாடல்

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் இன்று முற்பகல் இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

கலந்துரையாடலை ஆரம்பித்து உரையாற்றிய அமைச்சர் பீரிஸ், தான் வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக இராஜந்தந்திர குழுவினரிடம் ஒன்றாக கலந்துரையாடும் வாய்ப்பினைப் பெற்றது குறித்து நன்றி தெரிவித்துள்ளார்.

இதன்போது, நாடு கொவிட் தொற்று நிலைமையில் இருந்து மீண்டு வருகின்றமை தொடர்பில் அமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

அத்துடன் சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதார செயற்பாட்டை மீட்டெடுப்பதில் சர்வதேச சமூகத்தினரின் ஒத்துழைப்பையும் அமைச்சர் கோரியுள்ளார்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட தனது வெளிநாட்டு ஈடுபாடுகள் மற்றும் தாம் பங்கேற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஜனாதிபதியின் உரை தொடர்பில் இராஜந்தந்திர பிரதிநிதிகளிடம் அமைச்சர் தொகுத்துரைத்தார்.

மேலும், ஐ.நா மனித உரிமை பேரவையின் 48 ஆவது அமர்வின்போது, அந்தப் பேரவையுடன் தொடர்ந்துவரும் ஒத்துழைப்பு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றம் தொடர்பான தனது சுருக்கமான அறிக்கை தொடர்பாகவும் அமைச்சர் நினைவுகூர்ந்துள்ளார்.

இதுதொடர்பிலான சவால்களை ஏற்றுக்கொள்வதற்கும் உள்நாட்டு சிவில் சமூகத்தினருடனும் ஐ.நா உள்ளிட்ட எமது சர்வதேச பங்காளிகளுடனும் நேர்மையான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கும் இலங்கை தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனபோதிலும், உள்நாட்டு செயன்முறைகள் நடைபெற்றுவரும்போது, வெளிப்புற பொறிமுறை ஒன்றை ஸ்தாபிப்பதை இலங்கை நிராகரிக்கிறது என்பதனையும் அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜி.எஸ்.பி பிளஸ் நடைமுறைப்படுத்தலை மீளாய்வு செய்யவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் அண்மைய விஜயம் பற்றியும் அமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது, அமைச்சரின் ஈடுபாட்டிற்கும், தமது நலன்கள் தொடர்பான விடயங்களில் வெளிப்படுத்தும் வாய்ப்பினை வழங்கியமைக்கும் இராஜதந்திர சமூகத்தின் உறுப்பினர்கள் அமைச்சரிடம் நன்றி தெரிவித்ததாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.