பாடசாலைகளை ஒக்டோபர் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பிரதமருக்கும் இலங்கை ஆசிரியர் மற்றும் அதிபர் சங்க உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்ந்து அவர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு சாதகமான தீர்வு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து பாடசாலைகளை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தினத்தில் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
தற்போதைய கடினமான பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியில் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான முடிவு இது என அவர் கூறினார்.
எனினும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு முன்வைக்கப்படவில்லை என்று ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி தொழிற்சங்கப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஆசிரியர்கள் கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.