November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத தொழில்முறை நிறுத்தப்பட வேண்டும்’: சுப்ரமணியன் சுவாமி

இந்திய கடற்றொழிலாளர்களின் விவகாரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாட்டினை புரிந்துகொள்வதாக தெரிவித்துள்ள இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி இதுதொடர்பில் இந்திய அரச தலைவர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடிய போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பின் போது, இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

எல்லை தாண்டிய அத்துமீறிய சட்டவிரோத தொழில் முறைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டின் அவசியம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுப்ரமணியன் சுவாமிக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன்போது, இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத செயற்பாடுகளினால் இலங்கையின் வட பகுதி கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை புரிந்துகொள்ளக்கூடியதாக இருப்பதாக சுப்ரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

கடல் வளங்களை அழிக்கின்ற றோலர் தொழில் முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற தன்னுடைய நிலைப்பாட்டினையும் சுப்ரமணியன் சுவாமி வெளிப்படுத்தியுள்ளார்.