November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமருடனான கலந்துரையாடல் தொடர்பில் ஆசிரியர்களின் நிலைப்பாடு!

File Photo

ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில், தங்களது நிலைப்பாட்டை நாளைய தினம் அறிவிப்பதாக ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகள்  தொடர்பில் பிரதமர் தலைமையில் இன்று நண்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இன்று பகல் 12 மணிக்கு ஆரம்பமான குறித்த கலந்துரையாடல் சுமார் மூன்று மணித்தியாலங்கள் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கான தீர்வை மூன்று கட்டங்களாக வழங்குவதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் பிரதமர், ஆசிரியர் சங்கங்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.

ஆனால் தமக்கு ஒரே தடவையில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்துள்ள நிலையில், அதனை இரண்டு கட்டங்களாக வழங்க முடியுமென்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதன்படி முதலாவது கட்ட தீர்வை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக 2022 ஜனவரி முதலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தை 2023 ஜனவரிலும் வழங்க நடவடிக்கையெடுப்பதாக பின்னர் பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனினும் இதன்போது ஆசிரியர் சங்கங்கள் தமது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. நாளைய தினத்தில் அனைத்து ஆசிரியர் சங்கங்களும் கூட்டாக கூடி இது தொடர்பில் முடிவெடுப்பதாக கூறியுள்ளனர்.

இதேவேளை கடந்த 90 நாட்களாக ஆசிரியர் மற்றும் அதிபர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டம் குறித்து சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.