முன்னறிவிப்பின்றி வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான சொத்துக்களை அமெரிக்க நிறுவனத்திடம் கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவலை அடுத்தே இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, அரச சொத்தை கையகப்படுத்தும் அமெரிக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஏற்கனவே நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் ரஞ்சன் ஜெயலால் கூறியுள்ளார்.
செப்டம்பர் 17 ஆம் திகதி கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின், இன்னுமொரு அங்கமாக குறித்த ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்துடன் தொடர்புடைய அனைத்து பணிகளையும் இன்றுடன் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரஞ்சன் ஜெயலால் கூறியுள்ளார்.
இரகசியமாக மேற்கொள்ளப்படும் இந்த மோசடியான ஒப்பந்தங்கள் குறித்து நாட்டு மக்களும் உடனடியாக தெரியப்படுத்துவதோடு இந்த திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால், முன்னறிவிப்பின்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.