January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இணையதள பாதுகாப்பு சட்டத்தை வகுப்பதற்கு அமைச்சரவை அனுமதி

இலங்கையில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இணையதள பாதுகாப்பு சட்டத்தை வகுப்பதற்கான சட்டமூலமொன்றைத் தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைய இரண்டு சட்டமூலங்களைத் தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முப்படையினர், பொலிஸ் மற்றும் ஏனைய பிரதிநிதித்துவ நிறுவனங்கள் தற்போது தத்தமது நிறுவன மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இணையதள பாதுகாப்பு அலகின் மூலம் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக மேற்கொள்வதற்கு இயலுமான வகையில் தேவையான ஏற்பாடுகளை உள்வாங்கி, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியதாக புதிய சட்டமொன்று வகுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, தேசிய பாதுகாப்புக்கு ஏற்புடைய விடயங்கள் தவிர்ந்த தேசிய தகவல்கள் மற்றும் இணையத்தள பாதுகாப்பு மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குபடுத்தல் சட்டம்மொன்றை தயாரிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலத்திரனியல் தொடர்பாடல்களின் வளர்ச்சியால் தீவிரவாதக் குழுக்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பயங்கரவாத செயற்பாடுகள், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் சமூக விரோதச் செயல்களுக்காக இணையவெளி மற்றும் இலத்திரனியல் தொடர்பாடல்களைப் பயன்படுத்துவதற்கு தூண்டப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.