சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டவரை தட்டிக்கேட்ட பொது மக்களின் வீடுகள் மீது சுமார் 50 பேர் கொண்ட வாள்வெட்டுக் குழு மேற்கொண்ட தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.அத்துடன் 8 வீடுகள்,மூன்று மோட்டார் சைக்கிள்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் 2 மோட்டார் சைக்கிள்களும் தொலைபேசிகள் சிலவும் கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் யாழ்.வடமராட்சி,பருத்தித்துறை, கற்கோவளம் – புனித நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி புனித நகர் பகுதியில் கஞ்சா, கசிப்பு, போதைவஸ்து உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கையில் நபர் ஒருவர் ஈடுபட்டு வருகின்றார் எனவும், இது தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவரைத் தட்டிக் கேட்டனர் எனவும் தெரிய வருகின்றது.
இதனைத் தொடர்ந்து மதியம் 2 மணியளவில் மேற்படி கிராமத்துக்குள் வாள்களுடன் புகுந்த சுமார் 50 வரையான கும்பல் சட்டவிரோத செயற்பாட்டைத் தட்டிக் கேட்டவர்களின் வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதில் மூவர் வாள் வெட்டுக்கு இலக்காகினர்.8 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன், 3 மோட்டார் சைக்கிள்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.இரண்டு மோட்டார் சைக்கிள்களும், சூம் வழிமூலம் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களின் தொலைபேசிகளும் கொள்ளையிட்டுச் செல்லப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து பருத்தித்துறை பொலிஸார் அப்பகுதிக்கு சென்றனர் எனவும், பொலிஸாரை வாள் கொண்டு அவர்கள் மிரட்ட முற்பட்டதன் காரணமாக பொலிஸார் இராணுவத்தின் உதவியைக் கோரியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்ததை அடுத்து அந்தக் கும்பல் தப்பிச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார் மூவரைக் கைது செய்துள்ளனர்.