July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தோல்வியை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய உடன் பதவி விலக வேண்டும்”; சுமந்திரன் வலியுறுத்து

“தனது அரசின் தோல்வியை மக்கள் மத்தியில் ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, உடனடியாக பதவி விலக வேண்டும்”என்று வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை சந்தித்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“அரசை நடத்தத் தெரியவில்லை என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தானாகவே இராணுவத்தின் ஆண்டு விழா மேடையில் பகிரங்கமாக ஒத்துக் கொண்டுள்ளார்.

நாங்கள் தோற்றுவிட்டோம் என்பதை ஒத்துக்கொள்கின்றோம் என்று அவர் கூறியுள்ளார்.

அப்படித் தோல்வியை ஒத்துக் கொள்பவர் பதவியை உடனடியாக இராஜிநாமா செய்து விட்டுச் செல்ல வேண்டும்.

ஜனாதிபதி இரண்டு விடயங்களைச் சொன்னார். தேர்தலை நடத்துவேன், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று அவர் கூறினார். ஆனால், நாட்டில் உயர்ந்து செல்லும் விலைவாசிகளைக் கட்டுப்படுத்துவேன் என்று அவர் குறிப்பிடவில்லை.அதேபோன்று விவசாயிகளின் உரம் சம்பந்தமாகவும் அவர் எதுவுமே சொல்லவில்லை.

மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை குறித்துப் பேசாமல். அரசமைப்பை மாற்றுவேன் என்றும், தோல்வியை ஒப்புக்கொள்கின்றேன் என்றும் அவர் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்”.