சர்வதேச சந்தையில் பொருட்களில் விலை அதிகரித்துள்ள காரணத்தினால் இலங்கைக்கு இறக்கு செய்யும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றங்களை செய்ய எம்மால் முடியாதுள்ளது எனவும், மக்களுக்கு சிரமங்களை கொடுக்காது அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க அரசாங்கம் எவ்வளவோ முயற்சிகளை எடுத்தும் அவற்றில் தோல்வி கண்டுள்ளோம் எனவும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் கூறுகின்றனர் என சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் கொவிட் வைரஸ் பரவல் நிலைமையினால் சகல நாடுகளும் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடி நிலைமைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.அவ்வாறான நிலையில் இலங்கை போன்ற நாடுகளில் நிலைமை என்னவாக இருக்கும் என்பதை புத்திசாலித்தனமாக சிந்தித்து பார்க்க வேண்டும். உலக சந்தையில் சகல பொருட்களின் விலைகளும் வேகமாக அதிகரித்துக் கொண்டுள்ளது.எமது நாட்டில் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களில் பல இறக்குமதி செய்யப்படுகின்ற காரணத்தினால் சர்வதேச சந்தையின் விலைகளை எம்மால் கட்டுப்படுத்த முடியாது எனவும் கூறியுள்ளார்.
அதேபோல் இறக்குமதி பொருட்களின் விலை நிர்ணயம் எமது கைகளில் இல்லை.கடந்த காலங்களில் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை விரைவாக அதிகரித்துக் கொண்டே செல்கின்ற வேளையில், மக்கள் சிரமங்களை எதிர்கொண்ட நிலையில் இந்த நிலைமைகளை மாற்றியமைக்க அரசாங்கமாக நாம் முயற்சிகளை எடுத்தோம்.விலை நிர்ணயம் ஒன்றினை உருவாக்கி மக்களை நெருக்கடிக்குள் தள்ளாது சமாளிக்க எம்மாலான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துப் பார்த்தோம்.
ஆனால் எம்மால் முடியவில்லை.மக்களுக்கு நெருக்கடி ஏற்படாத வகையில் செயற்படுத்தலாம் என நாம் எடுத்த தீர்மானங்கள் அனைத்துமே அரசாங்கத்தின் கையை மீறி சென்றது.அதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன.பிரதானமாக நான் ஏற்கனவே கூறியதைப் போன்று சர்வதேச சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பு.அதேபோல் இறக்குமதியாளர்களின் கட்டுப்பாடுகள் மற்றும் தீர்மானங்கள் காரணமாக எம்மால் அரசாங்கமாக தீர்மானம் எடுக்க முடியாது போயுள்ளது.இப்போது அரசாங்கம் விலை நிர்ணயத்தை நீக்கியுள்ளது என்பதற்காக இது நிரந்தர தீர்மானம் அல்ல. நிலைமைகள் சுமுகமாக மாறியவுடன் மீண்டும் அரசாங்கமாக தீர்மானம் எடுப்போம் என்றார்.