நிறைவேற்று அதிகாரத்தை அளவுக்கு அதிகமாக தன் வசப்படுத்திக் கொண்டுள்ள ஜனாதிபதியினால் நாட்டு மக்களுக்கு கிடைக்கும் பயன் என்ன? அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயத்தை அரசாங்கம் நீக்கிக் கொண்டதன் மூலமாக இந்த நாட்டில் தீர்மானம் எடுக்கும் சக்தியாக அரசாங்கம் இல்லை என்பதை நிரூபித்துள்ளதென ஓமல்பே சோபித தேரர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்
அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயத்தை அரசாங்கம் நீக்கிக் கொள்கின்றது என்றால் இந்த நாட்டில் தீர்மானம் எடுக்கும் சக்தியாக அரசாங்கம் இல்லை என்பதே அதன் வெளிப்பாடாகும். நாட்டில் மக்களின் நலன்களை பாதுகாக்க அரசாங்கம் என்ற ஒன்று நாட்டில் இல்லை என்பது இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் மூலமாக வெளிப்பட்டுள்ளது எனக் கூறியுள்ள அவர்,
இதுவரை காலமாக இல்லாத அளவிற்கு இந்த அரசாங்கம் ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரத்தை பலப்படுத்திக் கொண்டுள்ளது. சட்டம், நீதி, ஏனைய சகல துறைகளை விடவும் ஜனாதிபதிக்கு மிதமிஞ்சிய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியினால் உறுதியான ஒரு தீர்மானம் எடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்,
இந்த நாட்டில் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் வியாபாரிகள் ஒரு சிலர் முன்னிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை மண்டியிட வைத்துவிட்டனர். இவ்வளவு அதிகாரங்களை தன்வசப்படுத்தியுள்ள நிறைவேற்று ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தின் பயன் என்ன? இந்த தீர்மானங்களை எடுக்கத்தான் அவருக்கு நிறைவேற்று அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் என செயற்பட்டனரா? இப்போது அரசாங்கம் செய்து கொண்டுள்ள தவறுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும். விலை நிர்ணயத்தில் அரசாங்கம் தலையிடாது போனால் மக்களின் வெறுப்பையும் எதிர்ப்பையும் அதிகளவில் சந்தித்த அரசாங்கமாக இது மாறிவிடும் என்றார்.