November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”உங்களிடம் கொடுத்துள்ள ஆயுதத்தை செயற்படுத்துங்கள்”: மீன்பிடி அமைச்சருக்கு கூறும் சுமந்திரன்

”ஆயுதத்தை மீன்பிடி அமைச்சிடம் கொடுத்திருக்கின்றோம். அதை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் விடுவது எங்களுடைய மீனவர்களுக்கே பாதிப்புகளை ஏற்படுத்தும்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமானஏம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை இன்று சந்தித்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எமது கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் வந்து எங்களுடைய மீனவர்களுடைய மீன்பிடி உபகரணங்களை பாதிக்கச் செய்த பல விடயங்கள் அண்மைக்காலமாக நடந்திருக்கின்றன.

அவர்களுடைய லட்சக்கணக்கான மீன்பிடி உபகரணங்களுக்கு சேதங்கள் ஏற்பட்டது. இந்த விடயங்கள் சம்பந்தமாகவே இந்தியத் துணைத் தூதுவருடன் கலந்துரையாடினோம் என்று சுமந்திரன் கூறியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு இழுவை மடி தொழிலை தடுக்க வேண்டும் என ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அது சட்டமாக்கப்பட்டாலும் மீன்பிடி அமைச்சு அந்த சட்டத்தை அமுல்படுத்தாமல் இருப்பது தான் இதற்கு பிரதான காரணமாக இருக்கின்றது. அந்தச் சட்டத்தை அடுல்படுத்தினால் இந்த பிரச்சினை பெரிய அளவிலே தீர்ந்து விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சட்டம் கொண்டுவரப்பட்டபோது இந்திய வெளிவிவகார அமைச்சு ஓர் எச்சரிக்கை ஒன்றை தமிழக மீனவர்களுக்கு விடுத்திருந்தது. ஒரு கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது ஆகவே இலங்கை கடற்பரப்புக்குள் போகவேண்டாம் என்ற எச்சரித்தது. இதன் காரணமாக ஓரிரு வருடங்களாக வராமல் இருந்திருந்த தமிழக மீனவர்கள், அந்த சட்டம் அமுல்ப்படுத்தப்படவில்லை என தெரிந்த பின்னர் மீண்டும் வர ஆரம்பித்து விட்டார்கள் என சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

அத்துமீறுபவர்களை கைது செய்து இந்த சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வது என்பதை மீன்பிடி அமைச்சு செய்ய வேண்டும். ஆகவே சட்டத்தை அமல்படுத்தாமல் இருப்பதே அத்துமீறல் தொடர்ச்சியாக நடப்பதற்குக் காரணமாக இருக்கின்றது எனவும் கூறியுள்ளார்.

மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நாங்கள் கூறுவது என்னவென்றால் சட்டங்களை இயற்றி கொடுத்திருக்கின்றோம். இதற்கான ஆயுதத்தை உங்களிடம் கொடுத்திருக்கின்றோம். அதை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் விடுவது எங்களுடைய மீனவர்களுக்கே பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.