நாட்டில் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், எதற்கு அரசாங்கம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.
‘எதிர்க்கட்சியின் மூச்சு” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மருத்துவமனை உபகரணங்களை தந்திரிமலை பிரதேச மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டை கட்டியெழுப்புவது மாத்திரமன்றி, நாட்டின் பொருளாதாரத்தைக்கூட முகாமைத்துவம் செய்துகொள்ள முடியாததை இந்த அரசாங்கம் நிரூபித்துக் காட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டைக் கொண்டுசெல்லும் திறன் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய குழுவிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
“அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விருப்பத்துக்கு ஏற்ப அதிகரித்துச் செல்லும் போது, அதனைக் கட்டுப்படுத்த முடியாது எனச் சொல்லுவதாயின், அரசாங்கம் எதற்கு என கேட்கின்றேன்.
இந்த நேரத்தில் மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சனைகளில் இருந்து மக்களை மீட்டு, அவர்களின் அன்றாட வாழ்க்கையை சுமுகமாகப் பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான திறன் அரசாங்கத்திடம் இல்லையென்றால், அதை ஏற்றுக்கொண்டு உடனடியாக பதவி விலக வேண்டும்”
என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.