நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தக்கூடிய ஒரு பெரிய தொகை அபராத பணமாக காட்டப்பட்டு, சில சுங்க அதிகாரிகளிடையே மோசடியான விதத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பொது கணக்குகளுக்கான பாராளுமன்றக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
குறிப்பிட்ட சுங்க அதிகாரிகளிடையே அபராத தொகையில் 70 சதவீதம் வெகுமதி தொகையாக இவ்வாறு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தகைய நடவடிக்கை நியாயப்படுத்தப்படவில்லை எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கச் சாவடியின் வெகுமதி தொகை தொடர்பான விதிகளில் உடனடியாக திருத்தம் மேற்கொள்வதன் மூலம் வரி வருவாயில் அதிக சதவீதம் அரசுக்கு கிடைக்கும் என குழு பரிந்துரைத்துள்ளது.
சுங்க அதிகாரிகளின் அபாயகரமான சேவைக்கான எந்தவொரு வெகுமதியையும் ஏற்றுக் கொள்வது நியாயமானதாக இருந்தாலும், அவ்வாறு செய்ய சட்டத்தில் எந்த விதமான பரிந்துரைகளும் இல்லை என்று அறிக்கை கூறுகிறது.
சுங்கச்சாவடியின் ஊடாக பொருட்களை இறக்குமதி செய்யும் போது அறவிடப்படும் வரிகளை கணக்கிடுவதில் ஏற்பட்டுள்ள பல்வேறு முறைகேடுகளால் அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் பொது கணக்குகளுக்கான நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே 2016 இல் நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரிக்கு 19 கோடி ரூபா வரை வரியை குறைத்து மதிப்பிடுவதன் மூலம், அதனை 20 கோடி ரூபாய் அபராத பணமாக காண்பித்து அதில் 50 வீதம் வெகுமதி தொகையாக மோசடி செய்யப்பட்டுள்ளதாக கோப் குழுவின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
அத்தோடு, சுங்க அதிகாரிகளின் நலனுக்காக இழப்பீட்டு நிதியில் 4 கோடிக்கும் அதிகமான தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
அதிகாரிகளின் இந்த செயல்முறையால் அரசுக்கு 12 கோடி ரூபாய்க்கு அதிகமான தொகை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குழு சுட்டிக்காட்டுகிறது.