July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை”: ஜி.எல்.பீரிஸ்

File Photo

13 ஆம் திருத்த சட்டத்தை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றோ அல்லது அதனுடன் தொடர்புபட்ட காரணிகளை நடைமுறைப்படுத்துவது குறித்தோ, இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று திருகோணமலை எண்ணெய்க்குதங்களை பார்வையிட அவர் சென்றிருந்த போதும், அவற்றை தம் வசப்படுத்தும் அழுத்தங்களை கூட அவர் பிரயோகித்திருக்கவில்லை எனவும் அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளார்.

கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந் இந்திய வெளியுறவுச் செயலாளர், தான் இலங்கையில் தங்கிருந்த காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்த போது 13 ஆவது திருத்தம் குறித்து வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் இந்த விடயம் குறித்து தற்போது ஊடகங்களுக்கு கூறியுள்ள, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவ்வாறாக அவர் அழுத்தம் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

”அவரது விஜயம் எந்தவொரு கட்டுப்பாட்டு காரணிகளுக்குள் இருக்கவில்லை, ஒரு வேலைத்திட்டத்தை இலக்கு வைத்ததாக இருக்கவும் இல்லை. இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவு ரீதியில் அவரது விஜயம் அமைந்தது” என பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதேபோல் இரு நாடுகளுக்கு இடையிலான நெருங்கிய அடித்தளமாக பெளத்த கலாசார பண்பாட்டு உறவுமுறை உள்ளது. அதன் அடிப்படையிலும் பொருளாதார, அரசியல் நட்புறவு ரீதியில் அவரது விஜயம் அமைந்திருந்தது எனவும் சுட்டிக்கட்டியுள்ளார்.