July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகின் ஆரோக்கியத்திற்கான சுற்றுலா தளங்களின் பட்டியலில் முதல் ஐந்து இடத்தில் இலங்கை!

உலகின் முதல் ஐந்து ஆரோக்கியத்திற்கான சுற்றுலா தளங்களில் ஒன்றாக இலங்கை இடம்பிடித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

குளோபல் வெல்னஸ் இன்ஸ்டிடியூட்டின் தரப்படுத்தல் படி, இலங்கை ஆரோக்கியத்திற்கான சுற்றுலா தளங்களில் நான்காவது இடத்திலும் பாலி முதலிடத்திலும் உள்ளது.

பாரிஸில் நடைபெற்ற  சர்வதேச சுற்றுலா கண்காட்சியில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுற்றுலா தளங்கள் ஆன்மீக செயற்பாடுகளுக்கு சிறந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் -19 தொற்று நோய்க்கு பின்னர், உலகின் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் மன, ஆன்மீக மற்றும் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இலங்கையில் பல ஆண்டுகளாக ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றது. தற்போது இதனை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

நாட்டின் பாதுகாப்பு இப்போது பலப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்புவதற்கு அச்சப்பட தேவையில்லை எனவும் குறிப்பிட்டார்.

டிசம்பர் 2020 இல் நாடு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டதன் பின்னர் 40,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்தனர். அவர்களில் 323 பேர் மட்டுமே கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் ரணதுங்க இதன் போது சுட்டிக்காட்டினார்.