File Photo
ஒரே நாடு – ஒரே சட்டத்தின் கீழ், மோசடிகள் இல்லாமல் சரியான முறையில் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு பூர்த்தியையொட்டி இன்று அனுராதபுரம், சாலியபுர இராணுவ முகாமில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினர் வழங்கிய ஒத்துழைப்புக்கு இதன்போது ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொவிட் பரவல் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்தாலும், குறித்த காலப்பகுதியில் அரசாங்கம் பெருமளவு வேலைத்திட்டங்களை மக்களுக்காக செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினருக்கு தேவையான அதிகாரங்களை வழங்கி நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு முன்னிலை வழங்கி செயற்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி மீண்டும் பயங்கரவாதம் மற்றும் மத அடிப்படைவாத செயற்பாடுகள் உருவாகுவதற்கு இடமளிக்காதவகையில் தேசியப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை மக்களுக்கு வாக்குறுதியளித்தவாறு புதிய அரசியலமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறையை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எ ன்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.