யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் நிர்வாக அதிகாரி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் மறைவு, அனைவருக்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பு என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளது.
குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே பிரதமர், இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”நம் தேசத்திற்குப் பெருமை தரும் வகையில், உலகப்புகழ் பெற்ற நல்லைக் கந்தன் ஆலயத்தின் நிர்வாகத்தினைச் சிறப்புற முன்னெடுத்தவர் குகஸ்ரீ இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார்.
அவருக்குக் கந்தப்பெருமானின் அருட்கடாட்சம் எப்போதும் துணை நின்றது. அதுவே குகஸ்ரீ இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரை செயலாற்றல் மிக்க அடியவனாக்கியது. அப்படிப்பட்ட மகோன்னத புருஷரின் இழப்பு, நம் அனைவருக்கும் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியுற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் எனவும் பிரதமர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், யாழ். மாநகர முதல்வர், அகில இலங்கை இந்து மாமன்றம், யாழ்.வர்த்தகர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் மறைவுக்கு இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.