July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு மூன்று பிரிவுகளின் கீழ் முத்திரை வெளியீடு

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு மூன்று பிரிவுகளின் கீழ் முத்திரைகளை வெளியிடும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் சனிக்கிழமை (09) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

உலக அஞ்சல் தின முத்திரை, நிரந்தர பிரிவின் கீழ் 1,000 ரூபாய் பெறுமதியான முத்திரை மற்றும் இலங்கையின் உள்ளூர் பறவைகளை உள்ளடக்கும் வகையிலான முத்திரை தொகுப்பும் வெளியிடப்பட்டது.

வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அதற்கான முதல் நாள் உறை மற்றும் முத்திரையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் வழங்கினார்.

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட உலக அஞ்சல் தின நினைவு முத்திரை -2021, கொவிட் 19 தொற்று நிலைமைக்கு மத்தியிலும் இலங்கை தபால் சேவை சர்வதேச ரீதியில் செயற்பட்டு வருகின்றமையை பிரதிபலிக்கும் வகையில் புலஸ்தி எதிரிவீர அவர்களினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

1,000 ரூபாய் பெறுமதியான நிரந்தர வகை முத்திரையானது யாபஹூவ சிங்கத்தை பிரதிபலிக்கும் வகையிலான கைகளினால் வரையப்பட்ட கிராஃபிக் ஓவியமாகும். இசுறு சதுரங்கவினால் இம்முத்திரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுவரை முத்திரைகளின் ஊடாக பிரதிபலிக்கப்படாத உள்ளூர் பறவைகளை சித்தரிக்கும் வகையிலான 6 முத்திரைகளும், ஆறு முதல் நாள் உறைகளும் இவ்வாறு வெளியிடப்பட்ட முத்திரைகளில் உள்ளடங்குகின்றன.