July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ். மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து, யாழ்ப்பாண மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

மீனவர் சங்கங்களின் ஏற்பாட்டில் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கடந்த 5 ஆம் திகதி இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகு, குருநகர் பகுதி மீனவர்களின் படகினை நேராக மோதி சேதப்படுத்தியது. அத்தடன் படகில் இருந்த மீனவர்களை  இந்திய மீனவர்கள் தாக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், இந்திய மீனவர்களின் இவ்வாறான நடவடிக்கைகளை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘எமது கடல் வளங்களை அழிக்காதே’, ‘இலங்கை அரசே இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்து’, ‘எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி வெளிநாட்டு மீனவர்களை அனுமதிக்காதே’ போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பினர்.

போராட்டத்திற்கு பின்னர் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் யாழ் மாவட்ட பணிப்பாளரிடம், மீனவர் சங்கங்களினால் மகஜர் கையளிக்கப்பட்டது.

அதேவேளை கடற்றொழில் அமைச்சருக்கும், யாழ். மாவட்ட செயலகத்திற்கும், யாழில் உள்ள இந்திய துணைத்தூதரகத்திற்கும் மகஜர்களை கையளிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டது.