January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”புதிய உத்வேகத்துடன் பணியாற்றத் தயாராகுங்கள்”: மாவட்டச் செயலாளர்களிடம் ஜனாதிபதி

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட பின்னடைவுகளைச் சமாளிக்க, புதிய பொதுமைப்படுத்தலின் கீழ், புது உத்வேகத்துடன் பணியாற்றத் தயாராகுமாறு, மாவட்டச் செயலாளர்களிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் திட்டமிடல்கள் பிரகாரம் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாவிட்டாலும், அனைத்துத் தப்பினரதும் அர்ப்பணிப்பினூடாக, கொவிட் தொற்றொழிப்புக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க முடியும். தடுப்பூசி ஏற்றலுடன், புதிய பொதுமைப்படுத்தலை நோக்கி நகரக் கிடைத்த வாய்ப்பைப் புறக்கணிக்காது இலக்குகளை வெற்றிகொள்வது அனைவரதும் பொறுப்பென்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மாவட்டச் செயலாளர்களுடன் இன்று முற்பகல் இடம்பெற்ற வீடியோ தொழில்நுட்பத்துடனான கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, முழு அரச இயந்திரமும் அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் செயற்பட வேண்டும். இதில், மாவட்டச் செயலாளர்களுக்கு மிகப் பெரிய பங்கு காணப்படுகிறது என, இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது கூறியுள்ள மாவட்ட செயலாளர்கள், ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்துக்குப் பக்க பலமாக இருந்து, இலக்குகளை வென்றெடுப்பதற்காக வேகமானதும் திறமையானதுமான பொதுச் சேவையை வழங்கத் தாயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமற்ற சுற்றுநிரூபங்கள் மற்றும் கட்டளைகள் – சட்டங்கள் என்பன, இந்த இலக்குகளை அடைவதற்குள்ள தற்காலத் தடைகளாகக் காணப்படுகின்றன என்று, மாவட்டச் செயலாளர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போதைய நிலைமை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி , அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய புதியதொரு தொடக்கத்துக்கு செல்வதற்குள்ள தடைகளைத் தகர்க்கத் தான் தயாரென்று கூறியுள்ளார்.

ஜனாபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும், இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.