
இலங்கை பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக இளைஞர், விளையாட்டுத்துறை, அபிவிருத்தி கூட்டிணைப்பு, கண்காணிப்பு அமைச்சரும், டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கை பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விசேட கூட்டம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவர்ட்டு விசேட விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளதுடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயகவும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டுள்ளார்.
இலங்கை பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் இசுறு தொடங்கொடவும் உப தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டார, சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகிய மூவரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
சங்கத்தின் பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் சுதர்ஷன தெனிப்பிட்டியவும் உப செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமியும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.