இரசாயன உரத்தின் மீதான தடைக்கு எதிராக எதிர்க்கட்சி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
இலங்கையில் இரசாயன உர இறக்குமதி மற்றும் பாவனையை தடை செய்வதற்கு அமைச்சரவை மூலம் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை செல்லுபடியற்றதாக அறிவிக்கும்படி கோரியே, இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய விவசாய முன்னணியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார மற்றும் விவசாய முன்னணியின் செயலாளர் ஆகியோர் நேற்று உயர் நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
விவசாய அமைச்சர், விவசாய அமைச்சின் செயலாளர், தேசிய உர செயலகம், விவசாய திணைக்களம் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இரசாயன உர தடையால் இலட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விவசாயிகள் விளைச்சலில் வீழ்ச்சியையும், பயிர்ச் செய்கைக்கான செலவில் அதிகரிப்பையும் எதிர்கொண்டுள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.