மாகாணசபைத் தேர்தல்களை நடத்துதல், அதிகாரங்களை பகிர்தல் உள்ளிட்ட 13வது அரசியலமைப்பு திருத்தத்தின் சரத்துக்கள் அனைத்தையும் முழுமையாக அமுல்படுத்துவது அவசியம் என்று இந்தியா இலங்கையை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பான நிலைப்பாட்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அரசாங்கத்திடமும் இந்திய வெளிவிவகாரதுறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா முன்வைத்துள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட வடக்கு கிழக்கு மற்றும் மலையக தமிழர் பிரதிநிதிகளிடமும் 13ஆவது திருத்தத்திற்கு அமைவாக ஐக்கிய இலங்கைக்குள் சமாதானம், நீதி, சமத்துவம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் சமூகத்தின் சகல அபிலாசைகளையும் பூர்த்தி செய்கின்ற நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவினை வழங்கும் என்ற வாக்குறுதியினை முன்வைத்துள்ளதாக இந்திய தூதரகம் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, ஒக்டோபர் 02 முதல் 05ஆம் திகதி வரை இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்திய வெளியுறவு செயலாளராக இலங்கைக்கு மேற்கொண்டிருக்கும் முதலாவது விஜயமாக இது அமைந்திருந்ததுடன், குறித்த மூன்று தினங்களில் பல்வேறு உத்தியோகபூர்வ சந்திப்புகளை நடத்தியிருந்தார்.
இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரை சந்தித்திருந்தார்.
அத்துடன் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பஹே மற்றும் பாதுகாப்புச் செயலர் ஜெனரல் கமல் குணரட்னே ஆகியோருடன் சுமூகமானதும் ஆக்கபூர்வமானதுமான சந்திப்புகளையும் மேற்கொண்டிருந்தார்.
அதேபோல் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகள் குழு, மற்றும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு ஆகியோருடன் வெளியுறவுச் செயலாளர் சந்திப்புக்களை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.