File Photo
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆய்வுகளில் மன்னார் வளைகுடாவில் மாத்திரம் 280 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எரிவாயு மற்றும் கனிய எண்ணெய் வளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இவற்றை பயன்படுத்தி இலங்கையின் அரச மற்றும் அரச நிறுவனங்களுடன் சேர்த்து மொத்த கடன்களை அடைத்து நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறினார்.
பாராளுமன்றத்தில் இன்று, பெட்ரோலிய வளங்கள் தொடர்பான திருத்தச் சட்டமூலத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை வரலாற்றில் செய்யப்பட்ட மிகப்பெரிய முதலீடு என்றால் போர்ட் சிட்டிக்காக செய்யப்பட்ட 1.5 பில்லியன் டொலர்களாகும். ஆனால் எரிவாயு பெற்றுக்கொள்ள 3 தொடக்கம் 5 பில்லியன் டொலர்கள் முதலீடு அவசியமாகும் எனக் கூறிய அமைச்சர், இலங்கையில் உள்ள முதல் பத்து கோடீஸ்வரர்கள் ஒன்றிணைந்து முழுமையாக அவர்களின் பணத்தை போட்டாலும் கூட இந்த முதலீட்டை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
இதனால்தான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் இவ்வாறான முதலீடுகளை செய்யும் வேளையில் அவர்களுக்கென்ற விசேட பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் சபையில் தெரிவித்தார்.
உலகமே எரிவாயு திட்டங்களில் நீண்ட தூரம் பயணித்துள்ள நிலையில் நாம் இப்போதுதான் ஆய்வுகளுக்கான ஆரம்பத்தையே முன்னெடுக்கின்றோம். உலகில் பல நாடுகள் எண்ணெய் பாவனையில் இருந்து விடுபட்டுக்கொண்டுள்ள நிலையில் அடுத்த 28 ஆண்டுகளில் எண்ணெய் பாவனை முடிவுக்கு வந்க்துவிடும் என எதிர்பார்கின்ற நிலையில், நாம் இப்போது எடுக்கும் முயற்சிகள் அடுத்த கால் நூற்றாண்டில் பாரிய சாதகத்தன்மையை உருவாக்கும் எனவும் அமைச்சர் கூறினார்.