
Photo: Facebook/Colombo International Airport – Ratmalana
கொழும்பு – இரத்மலானை விமான நிலையத்தின் ஊடாக சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிக்க உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய முதலாவது விமான சேவை எதிர்வரும் நவம்பர் மாதமளவில் இரத்மலானை விமான நிலையத்தின் ஊடாக மாலத்தீவுக்குப் பறக்க உள்ளது.
மாலைதீவு விமான சேவை நிறுவனத்துடனான நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், இரத்மலானையிலிருந்து விமான சேவைகளை முன்னெடுக்க இணங்கியுள்ளனர்.
முதற்கட்டமாக 50 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய விமானங்கள் கொழும்புக்கும் மாலைதீவுக்கும் இடையே சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் மாலைதீவை மையமாகக் கொண்ட ஒரு பிராந்திய சர்வதேச விமான நிலையமாக இரத்மலானை விமான நிலையத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாதுறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இரத்மலானை சர்வதேச விமான நிலையம் இலங்கையின் பழைமையான விமான நிலையமாகும்.
இது 1938 இல் அமைக்கப்பட்டதுடன், அதனூடாக சர்வதேச விமானசேவைகள் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் 1968 இல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச விமானசேவைகள் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து , இரத்மலானை விமான நிலையத்தின் சர்வதேச விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.
இரத்மலானை விமான நிலையத்தின் ஊடாக சர்வதேச விமானங்கள் பயணிப்பதை ஊக்குவிக்க ஒரு வருடத்திற்கு விமான தரப்பிடக் கட்டணங்களை நீக்கவும், பயணிகளுக்கான விமான சேவை வரியை நிறுத்தி வைக்கவும் அரசாங்கம் சமீபத்தில் தீர்மானம் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.