
இலங்கையில் போதைப்பொருள் பயன்படுத்தும் கனரக வாகன சாரதிகளுக்கு, சாரதி அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான மருத்துவ சான்றிதழை வாழ்நாள் முழுவதும் இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருளை பயன்படுத்தியவாறு வாகனம் செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் நோக்கில், போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 25 மாவட்டங்களிலும் உள்ள அலுவலகங்கள் இந்த நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் சவீந்திர கமகே கூறியுள்ளார்.
புதிதாக சாரதி அனுமதி பத்திரங்களை பெறும் அல்லது புதிப்பிக்கும் அனைத்து சாரதிகளும் போதைப் பொருள் பயன்படுத்துகின்றனரா என்று அறியும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இதில் அவர்கள் போதைப்பொருள் உட்கொள்வது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு 14 நாட்கள் சலுகை காலம் வழங்கப்பட்டு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இரண்டாவது சோதனையிலும் போதைப்பொருள் உட்கொள்வது உறுதிப்படுத்தப்பட்டால். வாழ்நாள் முழுவதும் கனரக வாகன சாரதி அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான மருத்துவ சான்றிதழ் வழங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வைத்தியர் சவீந்திர கமகே தெரிவித்துள்ளார்.
எனினும் ஏதாவது காரணத்திறக்காக முதலாவது பரிசோதனை அறிக்கை நிராகரிக்கப்படுபவர்கள் இரண்டாவது சோதனைக்கு உட்படுத்தப்பட மாட்டர்கள் எனவும் மேலதிக சோதனைக்காக அவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திற்கு அனுப்பப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.