யாழ்ப்பாணம் நயினாதீவில் முழுமைப்படுத்தப்பட்டுள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம், தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஆரம்ப பணிகள், கிளிநொச்சி- யாழ்ப்பாணம் நகர நீர் வழங்கல் திட்டம் ஆகியன பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கொழும்பு அலரி மாளிகையில் இருந்து இணையவழியில் பிரதமர் இந்த திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் “சுபீட்சத்திற்கான நோக்கு” எண்ணக்கருவுக்கு அமைய இந்தத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
நயினாதீவு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினூடாக நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய தீவுகளின் 6 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 5000 க்கும் அதிகமான பாவனையாளர்கள் சுத்தமான குடிநீரைப் பெறவுள்ளனர்.
அத்துடன், தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக முதல் கட்டமாக சுமார் 3 இலட்சம் மக்கள் குடிநீரை பெறும் நோக்கில், யாழ் நகர பிரதேசங்களில் நீர்க்குழாய்கள் அமைக்கப்படவுள்ளன.
இது யாழ். மாவட்டத்தின் சுமார் 184 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த பொதுமக்கள் பயன் பெறவுள்ள ஓர் பாரிய நீர் வழங்கல் திட்டமாகும்.
இதேவேளை, தாளையடியில் நிர்மாணிக்கப்படும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலைய திட்டத்தின் நீட்சியாக ஒரு இலட்சம் மக்களைப் பயனாளர்களாக உள்ளடக்கும் வகையில், கிளிநொச்சி தொடக்கம் யாழ்ப்பாணம் வரை 284 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீர் குழாய்களை அமைக்கும் திட்டமாக கிளிநொச்சி- யாழ்ப்பாணம் நீர் விநியோக திட்டம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.