January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிழக்கில் 26 பேருக்கு கொரோனா தொற்று: பொது நிகழ்வுகளுக்கு தடை விதிப்பு!

கொழும்பு – பேலியாகொட மீன் சந்தைக்கு சென்று வந்த கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 6 பேருக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 9 பேருக்கும் இன்றைய தினத்தில் வெளியான பீசீஆர் பரிசோதனை முடிவுகளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

இதனால் தொற்றுப் பரவலுக்கான அச்சுறுத்தல் இருப்பதால், இன்றில் இருந்து கிழக்கு மாகாணத்தில் பொது நிகழ்வுகளுக்கு தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பணிமனையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து பேலியகொட மீன் சந்தைக்கு மீன்களை கொண்டு செல்பவர்களை கடந்த நாட்களாக தனிமைப்படுத்தி பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவர்களில் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி,வாழைச்சேனை பிரதேசங்களில் 11 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், கல்முனை பிரதேசங்களில் 9 பேருக்கும், திருகோணமலை மீன் சந்தையில் 6 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தின் புல்மோட்டை தொடக்கம் பொத்துவில் வரையில் இதன் தாக்கம் இருக்கக் கூடுமெனவும், இதனால் மக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.