
தேசியப் பிரச்சனைக்கு தீர்வு காணும் விடயத்தில், புலம்பெயர் தமிழர்களுடன் பேசி ஏதேனும் இணக்கப்பாட்டுக்கு வரமுடியுமாக இருக்குமென்றால் அதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய எதிர்க்கட்சி பிரதம கொரடாவான, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவே இவ்வாறு கூறியுள்ளார்.
புலம்பெயர் தமிழர்களுடன் பேசுவதற்கு தயார் என்று ஜனாதிபதி கூறியமையை தாம் வரவேற்கின்றோம் என்று லக்ஷ்மன் கிரியெல்ல இதன்போது தெரிவித்துள்ளார்.
அவர்களுடன் பேசி ஏதேனும் இணக்கப்பட்டுக்கு வர முடியுமாக இருந்தால் எதிர்க்கட்சியினராகிய நாங்கள் எந்தவித இடையூறும் செய்ய மாட்டோம். அதனை மனதார வரவேற்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இலங்கை சர்வதேச சமூகத்தை வெற்றிக்கொள்ள வேண்டுமாயின், நாட்டில் மனித உரிமைகள், ஜனநாயகம், ஊடக சுதந்திரம், தொழிற்சங்க உரிமைகள் என்பனவற்றை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்பதனையும் நாங்கள் வலியுறுத்துகின்றோம் என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.