July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய இழுவைப் படகு மோதி குருநகர் மீனவர் படகு சேதம்!

இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய இழுவை மீன்பிடி படகு மோதி, யாழ்ப்பாணம் குருநகர் பகுதி மீனவ படகொன்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

வேண்டுமென்றே இந்திய மீனவர்கள் அந்தப் படகை, தமது படகின் மீது மோதியுள்ளதாக பாதிக்கப்பட்ட குருநகர் மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நேராக வந்து மோதி படகை சேதப்படுத்தி,  படகில் இருந்த மீனவர்களை கடலில் தூக்கி வீச முயற்சித்ததாக குருநகர் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறிய படகொன்றில் கடலுக்கு சென்ற குருநகர் பகுதி மீனவர்கள் மூவரே இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் குருநகர் மீனவ சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன் எமது கடலில் சுதந்திரமாகச் சென்று மீன் பிடிக்க முடியாத நிலை காணப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இதேவேளை இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டினை நிறுத்துவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென குருநகர் கடற்தொழில் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் யூலியன் சகாயராஜா தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களால் எமது மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் நீண்ட நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இன்றைய சம்பவமானது நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் படகு உரிமையாளர்களுக்கும் இந்திய அரசினால் நஷ்ட ஈடு வழங்குவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறாமல் இருக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

This slideshow requires JavaScript.