இந்தியாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் எண்ணெய் குதங்களை எந்த வகையிலேனும் எமது வசப்படுத்தும் போராட்டத்தையே நான் முன்னெடுத்து வருகின்றேன் என வலுசக்தி அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியறவுச் செயலாளர், என்னை சந்திக்க அழைப்பு விடுக்கவும்இல்லை, அவ்வாறு அவரை சந்திக்க வேண்டிய தேவையும் தனக்கு ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு விற்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்று எதிர்க்கட்சியினர், நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன மற்றும் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி ஆகியோருக்கு இடையில்செய்துகொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கையின் எண்ணெய் குதங்களை இந்தியாவுடன் இணைந்தே அபிவிருத்தி செய்ய முடியும் என மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளதாக கம்மன்பில அதன்போது தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல இந்த உடன்படிக்கை 20ஆண்டுகளுக்கு செய்துகொள்ளப்பட்ட ஒன்றல்ல, 35 ஆண்டுகளுக்கு இது நடைமுறையில் இருக்கும், அதற்கு பின்னரும் இந்தியாவின் வசமே இவை இருக்கும் என கொடுத்து முடிந்துவிட்டது எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.