“இலங்கை அரசாங்கம் அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதுடன், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளார்.
அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உள்ளிட் ட தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும், இந்த நிலைப்பாட்டிலிருந்து இந்தியா ஒருபோதும் பின்வாங்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா நேற்று மாலை, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இந்திய வெளியுறவுச் செயலாளருடன் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவும் பங்கேற்றார்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அதன் தலைவருடன் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி. (புளொட்) ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், இங்கு அரசியல் தீர்வு குறித்தே முக்கியத்துவம் கொடுத்துப் பேசப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது மற்றும் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவது குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளர் வெளிப்படையாகக் கருத்துக்களைக் கூறியுள்ள நிலையில் அரசுக்கும் அழுத்தம் கொடுத்துள்ளார் என சுமந்திரன் கூறினார்.
இதேவேளை 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அதன் ஊடாக முழுமையான அதிகாரப் பகிர்வை நோக்கிச் செல்ல வேண்டும் எனவும், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச உள்ளிட்ட அரச தரப்பினரைத் தான் சந்தித்தபோது வலியுறுத்தியதாக எம்மிடம் இந்திய வெளிவிவகார செயலாளர் தெரிவித்தார் என்றும் சுமந்திரன் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
இந்நிலையில், தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகள், அரசியல் தீர்வு விடயங்களில் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பை நாம் எதிர்பார்ப்பதாகவும், இந்திய வலியுறுத்தியுள்ள அதே நிலைப்பாட்டில் நாமும் உள்ளோம் என்பதையும் இந்திய வெளிவிவகார செயலாளரிடம் தெரிவித்தோம் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.